பல்லடம் அருகே காதலி தற்கொலை- காதலன் கைது

பல்லடம் அருகே காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் அருகே காதலி தற்கொலை- காதலன் கைது
Published on

பல்லடம்:

வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் திருமலைகுமார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மஞ்சுளா(20) என்ற மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருமலைகுமார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கணவன்-மனைவி, மகள் மஞ்சுளா ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தனர். அவர்களது மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான்.

இந்நிலையில் மஞ்சுளா தன்னுடன் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்திகேயன்(20) என்ற வாலிபரை காதலித்தார். இதுபற்றி தெரியவந்ததும் திருமலைகுமார், மனைவி, மகள், மகன் ஆகியோரை சொந்த ஊரான வால்பாறைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அவர் மட்டும் தனியாக தங்கி வேலைபார்த்து வந்தார். காதலனை பிரிந்த மஞ்சுளா சொந்த ஊரில் இருந்து கொண்டு செல்போன் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்தார்.

இந்த நிலையில் வால்பாறையில் இருந்து கடந்த 5-ந்தேதி பல்லடம் உப்பிலிபாளையத்தில் வசிக்கும் தனது பெரியம்மா வீட்டிற்கு மஞ்சுளா வந்தார். அங்கிருந்து மறுநாள் அதே பகுதியில் உள்ள காதலன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றார்.

இது பற்றி அறிந்த திருமலைக்குமார் செல்போன் மூலம் மஞ்சுளாவை அழைத்து பேசி கண்டித்தார். மேலும் வீட்டிற்கு திரும்பி வருமாறு கூறினார். அதனை ஏற்க மறுத்த மஞ்சுளா தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

கார்த்திகேயன் வீட்டில் தங்கியிருந்த மஞ்சுளா வீட்டின் விட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கார்த்திகேயன் தரப்பினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மஞ்சுளா உடலை கைப்பற்றி பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திகேயனை வற்புறுத்தியுள்ளார். மஞ்சுளாவை கார்த்திகேயன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அவர்களை சமாதானம் செய்த பின்னர் சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன். அது வரை உனது தந்தை வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ சென்று தங்கி கொள்ளுமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். அதனை மஞ்சுளா ஏற்றுக்கொள்ளவில்லை.

நம்பி வந்த காதலன் இப்படி கூறியதால் மனவேதனை அடைந்த மஞ்சுளா கார்த்திகேயன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து காதலி மஞ்சுளாவை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திகேயனை பல்லடம் போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com