சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கரு கலைந்ததால் கணவர் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

சேலம்:

சேலம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள தேவாங்கபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 23). இவரும், வாழப்பாடி கிழக்கு காட்டில் வசித்து வரும் பிரதாப் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கோமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதால் அவருக்கு கரு கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கோமதி கர்ப்பிணியாக இருக்கும்போது நல்லமுறையில் கவனித்து வந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கரு கலைந்தவுடன் கோமதியிடம் இதற்கு மேல் உனக்கு குழந்தை பிறக்காது? அதனால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க போகிறோம் என கூறியதாக தெரிகிறது. மேலும் கோமதியை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே கோமதியை சேலத்தில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக பிரதாப் கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு கோமதி பலமுறை தனது கணவரை தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியும் அவரை அழைத்து செல்லவில்லை. இதனால் விரக்தியடைந்த கோமதி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து சமாதானப்படுத்தினர். ஆனால் பிரதாப் தனது மனைவியை அவரது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இருந்து வந்தார். அதேநேரத்தில் மனமுடைந்த கோமதி, வாழப்பாடிக்கு சென்று தனது கணவரின் வீட்டின் முன்பு 3 நாட்கள் காத்திருந்தார். அப்போது கோமதிக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாயார் வீட்டிற்கு வந்த கோமதி அங்கு நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி கதறி அழுதார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கோமதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் வீட்டில் மயங்கி கிடந்த அவரை அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். கரு கலைந்ததையொட்டி காதல் கணவர் தன்னுடன் வாழ மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com