

ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் பாலூரை சேர்ந்தவர் சிவா (வயது 30). கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் மகளும் ஆசிரியையுமான நிமிதா (25) என்பவரும் காதலித்து, கடந்த 5 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நிமிதா தனது காதல் கணவரிடம் கூறாமல் தனது தாயாருடன் வேலூருக்கு பணி நிமித்தமாக வந்துவிட்டு, இரவாகியும் ஊர் திரும்பவில்லை. இதனால் சிவா ஆத்திரமடைந்தார்.
உமராபாத் பஸ் நிறுத்தத்தில் மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தார். இரவு 10 மணிக்கு நிமிதா வந்து சேர்ந்தார். வீட்டிற்கு அழைத்து சென்ற அவரிடம், சிவா தகராறில் ஈடுபட்டார். மனைவியை கண்டித்தார்.
இரவு முழுவதும் தகராறு நீடித்தது. மறுநாள் (நேற்று) காலையில் நிமிதா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிவா கூறினார்.
உமராபாத் போலீசார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகள் நிமிதா சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தாய் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிமிதாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயன், காதல் கணவர் சிவாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.