

வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் நந்த குமார் (23). இவர் முத்தூர் அருகே தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். அப்போது வெள்ளக் கோவில் உப்புபாளையத்தை சேர்ந்த நிவேதாவும் அங்கு படித்தார்.
கல்லூரியில் படிக்கும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்கு நந்தகுமார் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நந்த குமாரும், நிவேதாவும் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் வெள்ளகோவில் உப்பு பாளையத்தில் உள்ள நிவேதாவின் வீட்டில் குடியிருந்து வந்தனர். தற்போது நந்த குமார் ஓட்டன் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஸ்டிடியூட்டில் பி.எட். படித்து வருகிறார். ஈரோடு சிவகிரியில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நிவேதா எம்.எஸ்.சி. கணிதம் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை நந்தகுமார் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து நிவேதா வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டதால் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews