காதல் திருமணம் செய்ததால் விபரீதம்- புதுமாப்பிள்ளை வீட்டுக்கு தீ வைப்பு

பென்னாகரம் அருக காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கராஜ் வீடு தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
தங்கராஜ் வீடு தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
Published on

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக் குட்பட்ட சாணாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சின்னபொன்னு. இவர்களுடைய மகள் சத்யா (வயது19). அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் சுபாஷ் (22). இவரும், சத்யாவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களது காதல் திருமணத்தை ஏற்க மறுத்த பெண்ணின் பெற்றோர் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுபாஷ் வீட்டிற்கு பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் சேர்ந்து தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. அப்போது வீட்டில் இருந்து அனைவரும் வெளியே வந்தனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கும், பெரும்பாலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர்.  

இது தொடர்பாக பெரும்பாலை போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 5 நபர்களை பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணத்தால் வீட்டிற்கு தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com