திண்டுக்கல் அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்

திண்டுக்கல் அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் அருகே நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்
Published on

கொடைரோடு:

மதுரையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு சுங்கச்சாவடி முன்பாக வந்தபோது இடதுபுற ஓரத்தில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காமல் அரசு பஸ் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். திடீரென பஸ் விபத்தில் சிக்கியதை உணர்ந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் லாரியின் பின் பகுதி முழுவதும் சுக்கு நூறாக உடைந்து சேதமானது. மேலும் அரசு பஸ்சின் முன் பகுதியும் உடைந்தது.

பஸ் டிரைவரான மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 39), கண்டக்டர் சுப்புராஜ் (49) ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (33), மாசினி (47), அவரது மனைவி கவிதா (42), பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (30) ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சவுந்தர்யா (19), இசக்கி துரை (45), கோபி (33), சிவஞானய்யா, ஜெயமாலா மேரி, பாலு, திருப்பதி ராஜா, காஜாமைதீன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அம்மைய நாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை 4 வழிச்சாலையில் மறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு பயந்தே லாரிகள் சுங்கச்சாவடி அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் சென்ற பிறகு மீண்டும் அவை இயக்கப்படுகிறது.

அதுபோல்தான் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது. இதுவே விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com