எட்டயபுரத்தில் லாரி மீது பைக் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

எட்டயபுரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவசுப்பிரமணியன்
சிவசுப்பிரமணியன்
Published on

எட்டயபுரம்:

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள அத்திப்பட்டியை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 34). இவர் எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சிவசுப்பிரமணியன் நேற்று இரவு மாசார்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எட்டயபுரம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் கொலை சம்பவம் நடக்க இருப்பதாக அவருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த கிராமத்திற்கு சென்றார். அவர் மேலக்கரந்தை விலக்கு அருகே மோதலை தடுக்க வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் கன்டெய்னர் லாரி பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதனை கவனிக்காத சிவசுப்பிர மணியன் லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

உடனே இதுகுறித்து மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சப்- இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியனின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிர மணியன் தட்டார்மடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தான் மாசார்பட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் சுப்புலட்சுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோதலை தடுக்க சென்ற போது சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com