மல்லையாவுக்கு ஜாமின் நீட்டிப்பு - மும்பை சிறையின் வீடியோவை கேட்ட லண்டன் நீதிபதி

வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், செப்டம்பர் 12 வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #VijayMallya
மல்லையாவுக்கு ஜாமின் நீட்டிப்பு - மும்பை சிறையின் வீடியோவை கேட்ட லண்டன் நீதிபதி
Published on

லண்டன்:

இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

விசாரணையின் இறுதியில் செப்டம்பர் 12-ம் தேதி வரை மல்லையாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோ தனக்கு வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாதாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’ என மல்லையா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com