

பாராளுமன்றத்தின் மக்களவையில் தனியார் பங்களிப்புடன் கூடிய ஐ.ஐ.எம்.களில் பட்டம் அளிக்கும் அதிகாரம் வழங்குவது மற்றும் கூடுதல் தன்னாட்சி வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதையடுத்து மசோதா இன்று நிறைவேறியது.
மசோதாவை தாக்கல் செய்த மத்திய மனிதவளத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ‘அதிக கட்டணம் கட்ட முடியாததால் எந்த ஒரு மாணவரும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தனியார் பங்களிப்புடன் கூடிய ஐ.ஐ.எம்.கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஐ.ஐ.எம்.களுக்கு பட்டம் அளிக்கும் அதிகாரம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.
மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையாகும். வரும் காலங்களில் இந்தி மற்றும் மற்ற மொழிகளில் ஐ.ஐ.எம்.களில் பாடம் நடத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என குறிப்பிட்டார்.