மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு மைசூர் ராஜா ஆதரவு

பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு மைசூர் ராஜா குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Loksabhaelections2019 #Sumalatha
மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு மைசூர் ராஜா ஆதரவு
Published on

மைசூர்:

பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் மறைந்த கன்னட நடிகர் அம்பிரீஷின் மனைவி நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியில் ஜே.டி.எஸ். கட்சி சார்பில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் களத்தில் உள்ளார்.

சுமலதாவுக்கு பா.ஜனதா வெளிப்படையாக ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால் மாண்டியா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தவில்லை.

மேலும் அவருக்கு நடிகர், நடிகைகள் மற்றும் மாண்டியாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அம்பரீஷ் ரசிகர்களின் ஆதரவும் முழு அளவில் உள்ளது. இதனால் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணிக்கு சுமலதா கடும் சவாலாக இருக்கிறார்.

இந்த நிலையில் சுமலதாவுக்கு மைசூர் ராஜா குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து மைசூர் ராஜா, யதுவீர் கிருஷ்ணதத்தா சீமராஜா வாடியர் கூறியதாவது, நான் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறேன். தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் பிரசாரம் செய்ய மாட்டேன்.

எங்கள் குடும்பத்துக்கும் மறைந்த நடிகர் அம்பரீஷ் குடும்பத்துக்கும் 35 ஆண்டுகள் நல்ல பழக்கம் இருந்தது. அவரும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட கடினமான நேரங்களில் அம்பரீஷ் உறுதுணையாக இருந்தார். அவரது ஆதரவை எங்கள் குடும்பத்தினர் என்றும் மறக்க மாட்டோம். மாண்டியா தொகுதியில் போட்டியிடும் அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறோம்.

மாண்டியா மக்கள் தங்களுக்கு எது நல்லது என்பதை நன்கு அறிந்து உள்ளனர். அவர்கள் சரியான முடிவை தேர்வு செய்வார்கள் என்றார்.

அப்போது அவரிடம் நடிகர் உபேந்திரா புதிய கட்சி தொடங்குவதை பற்றி கேட்ட போது, மக்களுக்கு நல்லது செய்வது மற்றும் சிந்திப்பது பற்றி நினைப்பவர்களுக்கு அரண்மனை கதவுகள் திறந்தே இருக்கும் என்றார். #Loksabhaelections2019 #Sumalatha

X

Maalai Malar
www.maalaimalar.com