

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எட்டாவது நாளான இன்று காலை மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்பின், பிற்பகல் 12 மணிக்கு பிறகு அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, மக்களவையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி நிதி மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு இடையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கியிருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #BudgetSession #LokSabha #Adjourned #tamilnews