பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் - இரு அவைகளும் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. #Parliament #BudgetSession
பாராளுமன்றத்தை இன்றும் முடக்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் - இரு அவைகளும் ஒத்திவைப்பு
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. சில மணிநேரம் கூட நடைபெறாமல் இரு அவைகளும் முடங்கி உள்ளன.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தது. ஆனால், அவையில் அமளி நீடிப்பதால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை தொடங்கியபோதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கு மத்தியிலும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது ஈராக் நாட்டின் மோசூல் நகரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அறிக்கை வாசிக்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால், உறுப்பினர்களின் அமளியால் அறிக்கையை வாசிக்க முடியாது என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வெறுப்படைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சொந்த மக்கள் உயிரிழந்திருக்கும் உணர்வு கூட உங்களுக்கு இல்லை என்று கூறி சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய சுஷ்மா சுவராஜ், ஈராக் நாட்டில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  #Parliament #BudgetSession #LokSabha #RajyaSabha #adjourned #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com