

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்களும், பி.என்.பி. மோசடி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும், தென் கொரியாவில் இருந்து வந்த பாராளுமன்ற குழுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முறைப்படி வரவேற்றார். பின்னர், சமீபத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரபோத் பாண்டா, ஷியாமா சிங், பானு குமார் சாஸ்திரி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்குப் பின்னர் அவை நடவடிக்கை தொடங்கியது.
அப்போது, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். இடஒதுக்கீட்டை அதிகரிக்க அனுமதி கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பல உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவை முதலில் மதியம் வரையிலும், அதன்பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வங்கி மோசடி, ஆந்திரா கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்களால் இந்த வாரம் முழுவதும் மக்களவை முடங்கியது குறிப்பிடத்தக்கது. #tamilnews