எதிர்கட்சிகள் தொடர் அமளி - பாராளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் தொடர் அமளி - பாராளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும் ஒக்கி புயலால் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களுக்கும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அவையின் வழக்கமான அலுவல் தொடங்கியது. அப்போது, திடீரென்று எழுந்து நின்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் மோடி வாழ்க!, பா.ஜ.க. வாழ்க! என்று முழக்கங்களை எழுப்பினர். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விமுகம் காட்டி  வருவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில் பா.ஜ.க. உறுப்பினர் கிரித் சோமைய்யா பேசினார்.

காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று சமீபத்தில் குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். வேறுசில எதிர்கட்சியினர் ஒடிசா வெள்ள நிலவரம் தொடர்பாக முழக்கமிட்டனர்.

இதனால், கூச்சலும் குழப்பமும் நீடித்ததால் அவை தொடங்கிய பத்து நிமிடங்களுக்கு பின்னர் பகல் வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பிற்பகலில் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com