நாகை அருகே கடைக்குள் பூட்டி வைத்து சிறுவனை சித்ரவதை செய்த 2 பேர் கைது

பஞ்சவர்ணக்கிளி விற்ற தகராறில் சிறுவனை கடைக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜ்கபூர் மகன் பரக்த்துல்லா (வயது 28). அதே பகுதியை சேர்ந்த முகமது அலியின் மகன் தாரிக் (வயது 29). இருவரும் பஞ்சவர்ணக்கிளி வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் வளர்த்து வந்த பஞ்சவர்ணக்கிளி காணாமல் போய் விட்டது. காணாமல் போன அந்த பஞ்சவர்ணக்கிளியை சிலர் கூண்டில் எடுத்து செல்வதை இருவரும் பார்த்துள்ளனர். இந்தக் கிளியை உங்களிடம் கொடுத்தது யார்? என்று கேட்டுள்ளனர். அப்போது திருவாரூர் மாவட்டம் கிரக கொண்டான் தாமரைக் குளத்தை சேர்ந்த முகம்மது அலி மகன் மன்சூர் அலிகான் (15) என்ற சிறுவன் தான் எங்களிடம் விலைக்கு விற்றுள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து தாரிக், பரக்த்துல்லா இருவரும் மன்சூர் அலிகான் தேடி அலைந்தனர். அப்போது நாகை தம்பிதுரை பூங்கா அருகில் மன்சூர் அலிகானை பார்த்த இருவரும் சிறுவனை அருகில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் கை கால்களை கட்டி தாக்கியுள்ளனர். பின்னர் மன்சூர் அலிகானை கடையில் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டனர். அப்போது அலறல் சத்தம் கேட்ட வெளியே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கடையின் பூட்டை உடைத்து அந்த சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் பரக்த்துல்லா, தாரிக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com