புழல் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் கைதி நள்ளிரவில் சிக்கினார்

புழல் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி நள்ளிரவில் குடும்பத்தை சந்திக்க சென்ற போது போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் கைதி நள்ளிரவில் சிக்கினார்
Published on

சென்னை:

சென்னை வளசரவாக்கம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் என்கிற ஜெயராஜ் (38). 2008-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புழல் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவில் சின்னையன் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று காலையில் சின்னையன் உள்ளிட்ட 7 கைதிகள் தோட்ட வேலை செய்தனர்.

மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு விட்டு மீண்டும் பணியை தொடர்ந்தனர். வேலை முடிந்து மற்ற கைதிகள் அனைவரும் தங்களது அறைக்கு திரும்பினர். ஆனால் சின்னையன் மட்டும் மாயமானார்.

மாலை 3 மணி வரையில் தோட்ட வேலையில் ஈடுபட்ட அவர் அதன் பின்னர் காணாமல் போனது தெரிய வந்தது. சிறை வளாகத்தில் தேடியும் அவரை கண்டு பிடிக்கவில்லை. இதனால் சின்னையன் சிறையில் இருந்து தப்பி ஓடியது உறுதியானது.

இதுபற்றி புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சிறைக் காவலர்களும் சின்னையனை பிடிக்க வியூகம் வகுத்தனர். இதற்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு சாதாரண உடையில் காத்திருந்தனர்.

அப்போது சின்னையன் நள்ளிரவு 1 மணி அளவில் போதையில் தள்ளாடிய படியே குடும்பத்தினரை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றார்.

முன்னதாக அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். வீட்டுக்குள் நுழைய முயன்ற சின்னையனை சிறை காவலர்களே மடக்கி பிடித்தனர். பின்னர் உடனடியாக புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஆயுள் கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் தங்களது மதம் சார்ந்த பண்டிகைகளின் போது, பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சின்னையன் தற்போது சிறையில் இருந்து தப்பிச் சென்றிருப்பதால் நன்னடத்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இனி எளிதாக பரோல் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com