

திருச்சி:
தமிழக அரசு சிறைகளில் 10 வருடம் கடந்த ஆயுள் தண்டணை கைதிகளை சிறை விதிகளுக்கு உட்பட்டு வருகிற பிப்ரவரி 24-ந்தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்ய உள்ளது.
இதற்காக திருச்சி மத்திய ஆண்கள் சிறை மற்றும் காந்தி மார்க்கெட்டில் உள்ள மத்திய பெண்கள் சிறை ஆகியவற்றில் அடைக்கப்பட்டுள்ள 10 வருடத்தை கடந்த ஆயுள் தண்டணை கைதிகள் பட்டியலை சிறை அதிகாரிகள் தயாரித்து தமிழக அரசின் சிறைத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் 600 பேர் ஆயுள் தண்டணை பெற்றவர்கள். இவர்களில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு விடுதலை திட்டத்தில் 245 பேர் வருகிறார்கள்.
கைதிகள் விடுதலை திட்டத்தில் தமிழக அரசு சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி ஆயுள் தண்டணை பெற்ற கைதி வேறு எந்த வழக்கிலும் தொடர்பு கொண்டிருக்க கூடாது. கற்பழிப்பு வழக்கில் தண்டணை பெற்றிருக்ககூடாது. சிறை நன் நடத்தை விதிகளை மீறி இருத்தல் கூடாது.
60 வயதை கடந்திருந்தால் 5 வருடங்கள் மட்டும் நிறைவு செய்திருந்தால் அந்த ஆயுள் தண்டணை கைதியும் சிறப்பு விடுதலை திட்டத்தின் கீழ் பயன்பெறுவார். அதன்படி திருச்சி சிறைச்சாலையில் 80 வயதை கடந்த 2 முதியவர்களும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இந்த வயது முதிர்ந்த கைதிகள் சிறைக்கு வந்து 29 வருடம் தண்டணை காலத்தை கடந்துள்ளனர். அதே போன்று 2 கைதிகள் 26 வருடம் கடந்தவர்கள். இது போன்ற 60 வயதை கடந்த 80 வயதிற்கு உள்ளான கைதிகள் 25 பேரும் விடுதலை பெறும் பட்டியலில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 12 மத்திய சிறைச்சாலைகளில் 60 வயது முதல் 80 வயதிற்குள் உள்ள முதியவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் பல வருடங்களாக சர்க்கரை நோய், கண் பார்வை பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களால் கடும் அவதியை அனுபவித்து வந்தனர்.
சிறைச்சாலைகளில் இவர்களை பராமரிப்பதற்கு சிறை வார்டன்களுக்கு சிரமமாக இருந்தது. கழிவறைக்கு செல்ல கூட பிறர் உதவி இல்லாமல் செல்ல முடியாத வயது முதிர்ந்த கைதிகள் தற்போது விடுதலையாகி செல்ல உள்ளனர்.
இவர்கள் வெளியில் சென்றால் இவர்களை பராமரிக்க உறவினர்கள் இருக்கிறார்களா? என்பதையும் சிறைத்துறை விசாரித்துள்ளது.
அதேபோன்று கொலை வழக்குகளில் ஆயுள் தண்டணை பெற்று இளம் வயதில் சிறைக்கு வந்த பலர் வெளியில் சென்று திருமணம் செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 20 வயதில் நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக கொலையில் சிக்கி, கூட்டு சதிக்காக ஆயுள் தண்டணை பெற்று 20 வயதில் சிறைக்கு வந்த இளம் கைதிகள் இன்று 40 வயதை கடந்து உள்ளனர். அவர்களும் விடுதலை பட்டியலில் உள்ளனர்.
விடுதலையாகியதும் திருமணம், புது வாழ்க்கை என்ற முடிவில் உள்ளனர். கைதிகள் விடுதலை விஷயத்தில் சிறைத்துறை கைதிகளின் சொந்த ஊரில் தீவிர விசாரணை நடத்தி இவரை விடுவித்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதை ஊர் முக்கிய பிரமுகர்கள், நன்னடத்தை அலுவலர் ஆகியோரிடம் என்.ஓ.சி. சான்றிதழ் பெற்ற பிறகே விடுதலை பட்டியலில் சேர்த்துள்ளனர். #tamilnews