

தென்காசி:
களக்காடு புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை முண்டந்துறையில் உள்ளது. இதனால் முண்டந்துறையை சுற்றியுள்ள பாபநாசம் அணை பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முண்டந்துறை தவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புளியரையில் இருந்து களக்காடு வரை காட்டுப்பன்றி, சிறுத்தை, மிளா, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் செங்கோட்டை அருகே மேக்கரை அணைக்கட்டு ரோட்டில் உள்ள கனியப்பா மகன் முகமதுகனி (வயது40) என்பவர் அடவிநயினார் அணை 1-வது மடைப் பகுதியில் தனது 5 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
இவைகளில் 5 ஆடுகளையும் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை கடித்து குதறியுள்ளது. இதில் 2 ஆடுகள் மேக்கரை 1-வது மடைப்பகுதியில் செத்து கிடந்தன. மற்ற 3 ஆடுகளில் 2 ஆடுகளை வனப்பகுதிக்குள் சிறுத்தை இழுத்த சென்றதற்கான தடயங்கள் இருந்தன.
சிறுத்தை தாக்கியதில் ஒரு ஆடு குற்றியிரும், குலை உயிருமாக போராடிக் கொண்டிருந்த நிலையில் அதை மீட்டு முகமது கனி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தார். இதில் அந்த ஆடு மட்டும் உயிர் பிழைத்துள்ளது.
மேக்கரை மடைப்பகுதியில் சிறுத்தை நுழைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.