மணிமுத்தாறில் பரபரப்பு - ஊருக்குள் புகுந்து 5 ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தைகள்

மணிமுத்தாறு பகுதியில் 5 ஆடுகளை கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை அடித்து கொன்ற ஆடு
சிறுத்தை அடித்து கொன்ற ஆடு
Published on

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகிறது. அந்த விலங்குகள் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன.

மணிமுத்தாறு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, ஏர்மாள்புரம், கடையம் பகுதியையொட்டிய பெத்தாம்பிள்ளை குடியிருப்பு, கருத்தபிள்ளையூர் உள்ளிட்ட மலையடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு விலங்குகள் புகுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிமுத்தாறு பகுதியில் சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து ஆடு, நாய்களை அடித்துக்கொன்றது. இது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறை சார்பில் 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

சிறுத்தை சிக்குவதற்காக கூண்டுக்குள் ஆடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை. கூண்டுகள் வைத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறுத்தை சிக்கவில்லை. அதே நேரத்தில் சிறுத்தை மீண்டும் வரவில்லை. இருந்தாலும் சிறுத்தை சிக்காததால் மக்கள் பீதியுடன் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி மாலை மணிமுத்தாறு ஊருக்குள் கரடி ஒன்று புகுந்து அங்குள்ள புறக்காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள பொதுப் பணித்துறையினருக்கு சொந்தமான தங்கும் விடுதி அருகே மரத்தில் தஞ்சம் அடைந்தது. கரடி ஊருக்குள் புகுந்தது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பை வனத்துறையினர், சுமார் 9 மணிநேரத்திற்கும் மேலாக போராடி கரடியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருந்தபோதிலும் ஏற்கனவே அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்காததால் மக்கள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.

இந்தநிலையில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கடந்த 13-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுடன் லாரியில் ஏற்றிசென்று, பாபநாசம் வனப்பகுதிக்கு கொண்டுசென்று பத்திரமாக வனப்பகுதிக்குள் சிறுத்தையை விட்டனர்.

சிறுத்தை சிக்கியதால் மணிமுத்தாறு பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து 5 ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது.

மணிமுத்தாறு போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் அடைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் சிறுத்தை புகுந்தது.

அது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை அடித்துக்கொன்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது. இன்று காலையில் ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது அவரது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்துகிடந்தது. மேலும் 2 ஆடுகள் மாயமாகியிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் அம்பை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு பெரிய சிறுத்தை மற்றும் ஒரு குட்டி சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது.

இன்று அதிகாலை 2 சிறுத்தைகள் ஈஸ்வரன் வீட்டிற்குள் புகுந்து 3 ஆடுகளை கொன்றதும், 2 ஆடுகளை தூக்கி சென்றதும் ஆய்வில் தெரியவந்தது. மணிமுத்தாறு பகுதியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தேவையான இடங்களில் கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கவும், வனவிலங்குகள் ஊருக்கு புகுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com