

குருகிராமம்:
அரியானா மாநிலம் மானேசரில் மாருதி நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் ஒரு சிறுத்தை புகுந்தது.
அப்போது தொழிலாளர்கள் யாரும் இல்லை. தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் வனத்துறை ஊழியர்களும் உடனடியாக தொழிற்சாலைக்கு வந்து சிறுத்தையை தேடினர்.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் கடைசியாக அந்த சிறுத்தை, தொழிற்சாலையின் எஞ்சின் பகுதியில் காணப்பட்டது. அதன்பின்னர் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. இதனால் அதனைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, காலை ஷிப்டு பணி ரத்து செய்யப்பட்டது. பணிக்கு வந்திருந்த தொழிலாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சுமார் 2000 தொழிலாளர்கள் தொழிற்சாலை வாசலில் காத்து நின்றனர்.