

சென்னை:
சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தவிலையில் மளிகை பொருட்கள் விற்பனைக்காக எடுத்து செல்லப் படுகின்றன.
இந்தநிலையில் பருப்பு வகைகள் விலை அதிகரித்து இருக்கிறது. சில மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது:-
உற்பத்தி பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பருப்பு வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் ஆந்திரா மாநிலம் மற்றும் தேனி, விருதுநகரில் இருந்து தான் பருப்பு அதிகளவில் வரும். தற்போது விளைச்சல் பாதித்துள்ளதால் வழக்கமான அளவை காட்டிலும் 30 சதவீத பருப்பு மூட்டைகளே கோயம்பேட்டுக்கு வருகின்றன.
இதனால் பருப்பு வகைகளில் விலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சமாக ரூ.7 வரை விலை உயர்ந்திருக்கிறது. அதேபோல முந்திரி, உலர் திராட்சை, மிளகு, மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதேவேளை ஏலக்காய் விலை ஓரளவு சரிந்திருக்கிறது. ரூ.5 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்ட ஏலக்காய் தற்போது ரூ.4 ஆயிரமாக குறைந்துள்ளது. பூண்டு விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ மலைப்பூண்டு (முதல் தரம்) கிலோ ரூ.230-க்கு விற்பனை ஆகிறது. 2-ம் தர பூண்டு ரூ.210-க்கும், 3-ம் தர பூண்டு ரூ.180-க்கும் விற்பனை ஆகிறது.
உணவு தானிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-
துவரம் பருப்பு (முதல் தரம்)- ரூ.97, துவரம் பருப்பு (2-ம் தரம்)- ரூ.92, உளுந்தம் பருப்பு (முதல் தரம்)- ரூ.95, உளுந்தம் பருப்பு (2-ம் தரம்)- ரூ.78, பாசிபருப்பு (சிறு பருப்பு)- ரூ.87, கடலை பருப்பு- ரூ.69, மைசூர் பருப்பு (ரோஸ்)- ரூ.66, ஏலக்காய்- ரூ.4,000, முந்திரி (முழு)- ரூ.870, முந்திரி (அரை)- ரூ.680, உலர் திராட்சை- ரூ.250, மிளகு- ரூ.420, கடுகு- ரூ.58, சீரகம்- ரூ.250, வெந்தயம்- ரூ.76, தனியா- ரூ.85, மிளகாய் (நீட்)- ரூ.160, மிளகாய் (குண்டு)- ரூ.130, புளி- ரூ.95.
போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களில் 2-ம் மற்றும் 3-ம் கட்ட வியாபாரிகளிடம் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.