நிகழ்ச்சியில் ம.நடராஜன் வாழ்க்கை வரலாறு நூலை கி.வீரமணி வெளியிட அதை திவாகரன் பெற்றுக்கொண்ட காட்சி.
நிகழ்ச்சியில் ம.நடராஜன் வாழ்க்கை வரலாறு நூலை கி.வீரமணி வெளியிட அதை திவாகரன் பெற்றுக்கொண்ட காட்சி.

பதவிக்கு ஆசைப்படாமல் பலருக்கு ஏணியாக இருந்தவர் ம.நடராஜன்- தலைவர்கள் புகழாரம்

ம.நடராஜன் பதவிக்கு ஆசைப்படாமல் பலருக்கு ஏணியாக இருந்தவர் என அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
Published on

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி இன்று காலை தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசும் போது கூறியதாவது:-

மறைந்த ம.நடராஜன் அனைவரிடமும் புகழ் மிக்கவராக திகழ்ந்ததற்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து கட்சி தலைவர்களும், தமிழ் அமைப்பினரும் சான்றாக உள்ளனர். அவரை பொறுத்த வகையில் எந்த பதவிக்கும் ஆசை படாதவர். மற்றவர்கள் பதவியில் ஏறுவதற்கு ஏணியாக இருந்தவர்.

மொழி போராளியாக வாழ்க்கையை தொடங்கி, போராடிய மாணவர்களுக்கு தளபதியாக திகழ்ந்தார். வாழ்நாளின் இறுதி வரைக்கும் மொழி உணர்வு மிக்கவராக வாழ்ந்தார். ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு வரலாறாக திகழ்ந்த இவர் இது எதையும் எதற்காகவும் ஆசைப்பட்டு செய்யவில்லை.

ஈழத்தமிழர்கள் படுகாயமடைந்த போதும், விடுதலை புலிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இவர் பாதுகாப்பாக இருந்து உதவிகள் செய்தார். முள்ளிவாய்க்கால் போராட்டங்கள் அனைத்திலும் இவரது பங்கு இருந்தது. ஒரு போராட்டத்தில் பங்கு கொண்டு நானும், நடராஜனும் கடலூர் சிறைக்கு சென்றோம். தமிழ் மண்ணில் முள்ளிவாய்க்காலுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

அப்போது சொந்த நிலத்தை தந்து தஞ்சையில் முள்ளிவாய்க்கால் அமைப்பதற்கு முழுமையாக துணை நின்றார். எங்கு சென்றாலும் முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு நினைவாக ஒன்று வாங்கி வருவார். அவர் மொழி, இனம், நாடு என்று இறுதி வரை கடைபிடித்ததை நாமும் பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் வீரவணக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசும் போது கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக நடராஜனும், நானும் நெருங்கிய நட்பு பழகியவர்கள். மொழிக்காக தன்னை அர்பணித்தார். உலக நாடுகள் தமிழர்களையும், நம் நாடு பற்றியும் சிந்திக்க வைக்க இவர் அறிஞராக வாழ்ந்தார்.


முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதை எங்கு வைப்பது. எப்படி சிலைகள் அமைக்க வேண்டும் என்று அவர் கலந்து பேசி செய்தார். கல்லணைக்கு வரும் மக்கள், பெரியகோவிலுக்கு வரும் மக்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கும் வருகிறார்கள். இதுவே அவரது வரலாற்று சின்னமாக அமைந்துள்ளது.

புதிய பார்வை இதழில் அரசியல் கருத்துகளையும், இலக்கிய கருத்துகளையும் வேறுபாடு பார்க்காமல் படைத்தார். அவர் எழுதிய பல எழுத்துக்கள் பல நூலக பதிப்பாகி எத்தனையோ தலைவர்களிடத்தில் உள்ளது. உலக தமிழ் மக்களின் வரலாறு. மொழி வரலாறு போன்று மக்களின் உணர்வு பூர்வமான அவரது நூல் தொகுப்புகள் நான் இங்கு வரும் போதெல்லாம் என்னிடத்திலும் கொடுத்துள்ளார்.

எங்கள் வயதுக்கும் அவருக்கும் வித்தியாசம் உண்டு. இருந்தாலும் அவரது நூல்களும், முள்ளி வாய்க்கால் முற்றமும் அவர் மறைந்த பிறகு அவருடைய அடையாளமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது கூறியதாவது:-

நடராஜன் இறப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா போன்றவை சிறப்பாக நடத்தி எத்தனையோ தலைவர்கள், அறிஞர்களை அன்புடன் அழைத்து வந்தார்.

அவர் தமிழர் போராளி என்பது மட்டும் இல்லாமல் தமிழின போராளியாக திகழ்ந்தார். பெரியார், அண்ணாவை தன்னுடைய வாழ்க்கையாக வாழ்ந்து வந்தார்.

எத்தனையோ பேருக்கு இவரது தோள் பயன்பட்டது. எல்லாரையும் பதவியில் நிர்ணயிக்க கூடிய இடத்தில் இவர் இருந்தார். அரசியலில் விஞ்ஞானத்தை படைத்து புவி கவர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் மறையவில்லை நம் நெஞ்சங்களில் உறைந்து உள்ளார். தற்போது உள்ள மிக முக்கிய கட்டத்தில் அவர் இல்லாதது நமக்கு வருத்தம் அளிக்கிறது.

இவரது மறைவு பெரியார் கூறியது போன்று இயற்கையின் கோணல் புத்தி என்று கூறலாம். அவர் மறையவில்லை என்பதற்கு வரலாறு முள்ளிவாய்க்கால். கடைசி வரை போராடி கொண்டே இருந்தார். கடைசியில் நோயோடு போராடினார். இன்று படமாக மாறியவர் நமக்கு இன மொழிக்கு பாடமாக வாழ்கிறார். அவர் காணவிரும்பிய மானமுள்ள, அறிவுள்ள சமுதாயத்தை நாம் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com