கர்நாடகாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது - பா.ஜ.க. சார்பில் 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர். #KarnatakaElection2018
கர்நாடகாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது - பா.ஜ.க. சார்பில் 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
Published on

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா,  எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

கடந்த 2 மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று மிகப்பெரிய பிரசார படையை அரசியல் கட்சிகள் களமிறக்கி உள்ளன.

பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ஆனந்த் குமார், சதானந்த கவுடா, அனுராக் தாகூர், கிருஷ்ணபால் குஜ்ஜார், மீனாட்சி லேகி, பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகள், சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் கவுகார் உள்பட 23 தலைவர்கள் திறந்த வாகனங்களில் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். சித்தராமையாவின் பதாமி தொகுதியில் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதேபோல் மற்ற கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்களுடன் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com