தலீபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் எச்சரிக்கை - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

“இதுவே கடைசி வாய்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று தலீபான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலீபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் எச்சரிக்கை - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
Published on

“இதுவே கடைசி வாய்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று தலீபான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது.

அதைத் தொடர்ந்து ஹமீத் கர்சாய் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா நிறுவியது. தொடர்ந்து மக்களாட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் தலீபான்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

தலீபான்களை ஒடுக்குவதற்கு உள்நாட்டுப்படைகளுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 31-ந் தேதி காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இது அந்த நாட்டு மக்களிடையே அஷரப் கனி அரசின்மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தலீபான்களின் கொட்டத்தை ஒடுக்குவதில் அஷரப் கனி அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்கொலைப்படை தாக்குதல் நடந்த இடத்தில், நேற்று தொடர்ந்து 5-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், காபூலில் நேற்று 23 நாடுகள் பங்கேற்ற ‘காபூல் பிராசஸ்’ (காபூல் செயல்முறை) என்ற தலைப்பிலான மாநாட்டில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி பேசினார்.

அப்போது அவர் தலீபான்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசினார். அவர் கூறியதாவது:-

நாங்கள் சமாதானத்திற்கான ஒரு வாய்ப்பை தருகிறோம். ஆனால் இது வெளிப்படையான சலுகை அல்ல. காலம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விளைவுகளை சந்தியுங்கள்.

தலீபான்கள் பேச்சுவார்த்தையில் இணைந்து கொள்ள விரும்பினால், அதற்கு ஆப்கானிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும். ஆனால் இது கடைசி வாய்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com