நிலத்தகராறில் தந்தை-மகன் படுகொலை - பழிக்குப்பழியாக உறவினர்கள் வெறிச்செயல்

சமயபுரம் அருகே நிலத்தகராறில் தந்தை-மகன் பழிக்குப்பழியாக உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சமயபுரம்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் நடுக்கரையை சேர்ந்தவர் விவசாயி ரோக்ராஜ் (வயது 70). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனது அண்ணன் ஆரோக்கியசாமியை நிலத்தகராறில் கொலை செய்தார். இதற்காக ஆயுள்தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரோக்ராஜ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நன்னடத்தை காரணமாக விடுதலையானார்.

இதைத்தொடர்ந்து நடுக்கரையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் மனைவி மற்றும் மகன் ஜான்டேவிட்(32) ஆகியோருடன் ரோக்ராஜ் வசித்து வந்தார். இவர்களின் குடும்பத்துக்கும், ஆரோக்கியசாமியின் மகனான இருங்கலூரை சேர்ந்த சேசுராஜ் (52), சேசுராஜின் மகன் பிரின்ஸ் (26) ஆகியோருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது, ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பிவைப்பார்கள். ஆனால் அவர்களுக்குள் முன்விரோதம் தொடர்ந்துள்ளது. நேற்று காலை ரோக்ராஜ், ஜான்டேவிட் வசித்து வரும் நடுக்கரை தோட்டத்துக்கு சேசுராஜும், அவரது மகன் பிரின்ஸ் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடப்பாரை கம்பி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ரோக்ராஜ், அவருடைய மகன் ஜான்டேவிட் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சேசுராஜ், அவருடைய மகன் பிரின்ஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சேசுராஜ், பிரின்ஸ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தையை கொன்ற சித்தப்பாவை மகனுடன் பழிக்குப்பழியாக 15 ஆண்டுகளுக்கு பின்னர் கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com