நிலம் வாங்கித்தருவதாக ஏமாற்றினர்: ரூ.50 லட்சத்தை இழந்த வங்கி அதிகாரி தற்கொலை

நிலம் வாங்க ரூபாய் 50 லட்சம் கொடுத்து ஏமாறிய வங்கி அதிகாரி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் வாங்கித்தருவதாக ஏமாற்றினர்: ரூ.50 லட்சத்தை இழந்த வங்கி அதிகாரி தற்கொலை
Published on

அம்பத்தூர்:

அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 52). சேலையூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர், சின்ன காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சரவணன், கணேசன் ஆகியோரிடம் நிலம் வாங்கித் தருமாறு ரூ.50 லட்சம் கொடுத்து இருந்தார்.

ஆனால் அவர்கள் கூறியபடி நிலத்தை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்ட சந்திரசேகருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் சந்திரசேகர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அயனாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் மற்றும் போலீசார் சந்திரசேகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், “நான் சேலையூரில் இருந்த வீட்டை விற்று வைத்திருந்த ரூ.50 லட்சத்தை நிலம் வாங்கி கொடுக்கும்படி சின்ன காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சரவணன், கணேசனிடம் கொடுத்து இருந்தேன்.

ஆனால் அவர்கள் நிலம் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தர மறுத்து மிரட்டுகிறார்கள். எனது சாவுக்கு அவர்கள் இருவரும்தான் காரணம்” என்று எழுதப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சரவணன், கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் சின்ன காஞ்சீபுரம் விரைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com