ஏரி-குளங்களை தூர்வாரக்கோரி பூண்டி ஏரியில் பெண் திடீர் போராட்டம்

ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி பூண்டி ஏரியில் நின்றபடி பெண் ஒருவர் தனியாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் போராட்டம்
பெண் போராட்டம்
Published on

திருவள்ளூர்:

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதற்கு ஏரி-குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்காததே காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

எனவே வரும் மழை காலத்துக்கு முன்பு அனைத்து ஏரி-குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி பூண்டி ஏரியில் நின்றபடி பெண் ஒருவர் தனியாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மனைவி நர்மதா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் கடந்த 2015-ல் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர் தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க போராடி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை பூண்டி ஏரிக்கு நர்மதா வந்தார். திடீரென்று ஏரிக்குள் இறங்கிய அவர் கையில் காமராஜர், ராஜராஜ சோழன் உருவப்படத்தை வைத்துக்கொண்டு ஏரி, குளங்களை தூர்வாரக்கோரி தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய 4 நீர்பிடிப்பு பகுதியில் தமிழக அரசு உடனடியாக தூர் வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புல்லரம்பாக்கம் போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நர்மதா, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com