

குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருபவர் சந்திரன். கேபிள் டி.வி.உரிமையாளர்.
நேற்று இரவு இவர் தனது மனைவி சித்ராவுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சந்திரன் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.
கொள்ளையர்கள் தங்கள் கையில் உருட்டுக்கட்டை, கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர். 3 பேரும் டவுசர் அணிந்திருந்தனர்.
கொள்ளையர்களில் ஒருவன் முகத்தில் கருப்பு மை தடவி இருந்தான். மற்றொருவன் கைக்குட்டையால் முகத்தை மூடி இருந்தான். இன்னொருவன் ஒட்டு மீசை வைத்திருந்தான்.
கொள்ளையர்களை பார்த்ததும் கேபிள் டி.வி. உரிமையாளர் சந்திரன், அவரது மனைவி சித்ரா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சத்தம் போட முயன்றனர். அவர்களை கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டினார்கள். பின்னர் சந்திரனிடம் பணம் எங்கு வைத்து உள்ளீர்கள் என கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார்.
அதற்கு கொள்ளையர்கள் மாத மாதம் வசூலிக்கும் கேபிள் பணம் எங்கே போனது என்றனர். பின்னர் கணவன் - மனைவியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சந்திரன் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை கும்பலை போலீசார் தேடி வரு கிறார்கள். கேபிள் டி.வி. உரிமையாளர் வீட்டில் நகை -பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குன்னத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.