குன்னத்தில் பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் பணம்- மதுபாட்டில்கள் திருட்டு

குன்னத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
டாஸ்மாக் கடை கொள்ளை
டாஸ்மாக் கடை கொள்ளை
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் அரியலூர் -பெரம்பலூர் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறும் இந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக சரவணனும்(வயது 48), விற்பனையாளர்களாக செல்வராஜ்(46), முருகன்(48) ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கடையில் இருந்த ரொக்கம் ரூ.3 ஆயிரத்து 320 மற்றும் ரூ.4 ஆயிரத்து 500 மதிப்பிலான 25 மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

நேற்று காலை அப்பகுதி வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த கடைக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com