கும்பகோணம் அருகே இறந்ததாக கருதி எரிக்கப்பட்ட பெண் உயிருடன் வந்தார்- உறவினர்கள் அதிர்ச்சி

இறந்ததாக கருதி எரிக்கப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே இறந்ததாக கருதி எரிக்கப்பட்ட பெண் உயிருடன் வந்தார்- உறவினர்கள் அதிர்ச்சி
Published on

கும்பகோணம்: 

கும்பகோணம் அருகே திருபுவனம் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது45). இவருக்கு கடந்த 24 வருடங்களுக்கு முன்பு ஆஷா(42) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விக்னேஸ்வரன்(22) என்ற மகன் உள்ளார். ஆஷாவுக்கு 13 வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதித்ததால் ராமச்சந்திரன் கோர்ட் மூலம் அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து ஆஷா ஆதரவின்றி முற்றிலும் மனநிலை பாதிப்படைந்து அப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி திருபுவனம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் முன்பு ஒரு பெண் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கடந்த 27-ந்தேதி திருவிடைமருதூர் போலீசார் ராமச்சந்திரனுக்கு போன் செய்து உங்கள் மனைவி ஆஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். வந்து உடலை பெற்று செல்லுங்கள் என்று கூறினராம். ஆனால் ராமச்சந்திரன் நான் அவரை விவாகரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று சொன்னாராம்.

ஆனால் போலீசார் அவரது மகன் உங்களிடம் தானே உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உடலை பெற்று இறுதிகாரியங்கள் செய்யுங்கள் என்றனராம். இதையடுத்து ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் சென்று மருத்துவமனையில் பார்த்தபோது ஆஷாவின் முகம் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆஷா(வயது62), இயற்கை மரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த ராமச்சந்திரன் திருவிடைமருதூர் போலீசாரிடம் முகமும் அடையாளம் தெரியவில்லை. வயது 62 என்று உள்ளதே என்று கேட்டபோது, அதற்கு போலீசார் பிரிண்டிங் தவறில் வயது 42 என்பதற்கு பதில் 62 என்று வந்து விட்டது. இது உங்கள் மனைவியின் உடல் தான் என்று வலுக்கட்டாயமாக உடலை ஒப்படைத்தனராம்.இதனால் ராமச்சந்திரன் உடலை பெற்று சென்று அன்று மாலையே (27-ந்தேதி) கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் முறைப்படி சடங்குகள் செய்து எரித்து விட்டாராம்.

இந்நிலையில் இன்று காலை ஆஷா திருபுவனம் பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அது ஆஷாதான் என்பது தெரியவந்தது.

அப்போது தான் திருவிடைமருதூர் போலீசார் முறைப்படி விசாரிக்காமல் அலட்சியப் போக்கால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த யாரோ ஒரு பெண்ணின் உடலை தனது மனைவியின் உடல் என்று கூறி வலுக்கட்டாயமாக ஒப்படைத்தது தெரியவந்தது.

போலீசாரின் அலட்சியப் போக்கால் திருபுவனம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போலீசார் ஒப்படைத்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர். இறந்ததாக கூறப்பட்ட ஆஷா எப்படி உயிருடன் வந்தார்? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com