குமரியில் கொட்டி தீர்த்த கோடை மழை- முள்ளங்கினாவிளையில் 42 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. முள்ளாங்கினாவிளையில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மழை
மழை
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையிலும் வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் தக்கலை, நாகர்கோவில், கோழிப்போர் விளை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் சுமார் 45 நிமிடம் மழை பெய்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் காற்றும் வீசியதால் வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையின் கடைகள் சரிந்து விழுந்தன.

இரணியல், பூதப்பாண்டி, அடையாமடை, முள்ளாங்கினாவிளை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. கோடை மழை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் இருந்தது. முள்ளாங்கினாவிளையில் அதிகபட்சமாக 42 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30 அடியை எட்டியது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது. அணைக்கு 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 7.60 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 7.71 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது. ஆனால் மேகங்கள் கலைந்து சென்று விடுகின்றன.

இந்த பகுதிகளில் மழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

பேச்சிப்பாறை-1.2, நாகர் கோவில்-39, பூதப்பாண்டி- 8.2, சுருளோடு-1.6, கன்னி மார்-1.2, இரணியல்-37, ஆணைக்கிடங்கு-23.4, அடையாமடை-16, கோழிப் போர்விளை-42, முள்ளங்கினாவிளை-20.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com