2 கி.மீ. தூரம் மண் சாலை அமைக்க நிலங்களை கொடுத்த விவசாயிகள்

குளித்தலை அருகே 2 கி.மீ. தூரத்திற்கு மண் சாலை அமைக்க விவசாயிகள் தங்கள் நிலங்களை கொடுத்தனர். அதை தார்சாலையாக மாற்ற அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்சாலை
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்சாலை
Published on

குளித்தலை:

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திம்மாச்சிபுரம் முதல் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குஉட்பட்ட கருப்பத்தூர் ஊராட்சி வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் பல வருடங்களாக இல்லை. இதன் காரணமாக அந்த நிலங்களுக்கு தேவையான உரம், வாழைக்கன்று, குச்சி மற்றும் விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லவும், அந்த நிலங்களில் விளைந்த விளைபொருட்களை கொண்டு செல்லவும் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் கூலி ஆட்களை கொண்டு, விளைநிலங்களுக்கு தேவையான இடுபொருட்கள், மற்றும் விளைபொருட்களை கொண்டு சென்று வந்தனர். இதற்கு அதிப்படியான கூலியும் வழங்கி வந்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் விவசாயம் செய்யாமல் தங்கள் நிலங்களை தரிசு நிலங்களாகவே போட்டுவைத்தனர். இதையடுத்து சில விவசாயிகள், சாலை வசதி இல்லாத விவசாய நிலங்களுக்கு சாலை அமைக்க தங்கள் நிலங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து அதில் சுமார் 20 அடி அகலத்தில் மண் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலை வசதி இல்லாத விவசாய நிலங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த கே.பேட்டை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். அவரது முயற்சியால், சாலை வசதி இல்லாத நிலங்களை கொண்ட விவசாயிகளிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில், சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள், மண் சாலை அமைக்க தங்கள் நிலங்களை தானமாக வழங்கினர். இதையடுத்து திம்மாச்சிபுரம் மூட்டுக்குளி பாலம் முதல் கருப்பத்தூர் கட்டுக்கரை வரையுள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் மண்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆகும் செலவுக்கு விவசாயிகளிடமும், கே.பேட்டை ஊராட்சித் தலைவரிடமும் பணம் பெற்று பணி நடக்கிறது. விவசாயிகளால் அமைக்கப்பட்டு வரும் இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com