குலசேகரம்-திருவட்டாரில் கோடை மழை

குலசேகரம்-திருவட்டாரில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கோடை மழை வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
குலசேகரம்-திருவட்டாரில் கோடை மழை
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் இந்த மழை நீடிக்கிறது.

நேற்று காலை வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் மாலையில் கன மழை பெய்ய தொடங்கியது.

மழையின்போது பலத்த காற்றும் வீசியது. மேலும் இடி, மின்னலும் அதிகமாக இருந்தது. இந்த மழை காரணமாக நாகர்கோவில் நகர சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடை வீதிகள், சுற்றுலா தலங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. கன மழை காரணமாக பொது மக்கள் சிரமத்துடனேயே வீடுகளுக்கு திரும்பினார்கள். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் பாய்ந்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது.

பாதாள சாக்கடைக்காக நகரின் சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் மழை காரணமாக அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது.

குமரி மேற்கு மாவட்டத்திலும் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு, களியல், அருமனை, கடையாலுமூடு, பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி, திருவட்டார், மார்த்தாண்டம், வேர்கிளம்பி, களியக்கா விளை போன்ற பகுதிகளில் சிலமணி நேரங்கள் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திற்பரப்பில் 82.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.புத்தன் அணையில் 66.4 மில்லி மீட்டரும், பெருஞ்சாணியில் 52 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 12.2 மில்லி மீட்டரும் மழை பெய்தது. குமரி மாவட்டத்தின் அணை பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்த போது அந்த பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஒதுங்க இடமின்றி மழையில் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் மூலம் அங்கிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டதால் திற்பரப்பு பகுதியில் கடும் பேக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை காரணமாக களியல் - குலசேகரம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் போக்கு வரத்தை போராடி சீர்செய்தனர்.

குலசேகரம், திற்பரப்பு பகுதிகளில் மழையின்போது மின்னலும் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்னல் தாக்கியதில் டி.வி., பிரிட்ஜ் உள்பட ஏராளமான மின்சாதனங்கள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் கனமழை காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்வதால் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.

இதனால் குமரி மாவட்டத் தில் இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com