குலசேகரத்தில் கையில் பிளேடால் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய பிளஸ்-1 மாணவர்

குலசேகரத்தில் கையில் பிளேடால் அறுக்கப்பட்டு பிளஸ்-1 மாணவர் உயிருக்கு போராடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவரின் கையில் பிளேடால் அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்த காட்சி.
மாணவரின் கையில் பிளேடால் அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்த காட்சி.
Published on

குலசேகரம்:

செல்போனில் ஆன்லைன் மூலம் விளையாடும் புளூவேல் விளையாட்டு வாலிபர்கள் மற்றும் மாணவ- மாணவிகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளி வருகிறது.

தமிழகத்தில் மதுரை மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர், வங்கி பெண் ஊழியர் உள்பட பலர் இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மேலூர் மாணவர் ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டார்.

இதையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் இவ்விளையாட்டை ஷேர்இட் செய்வதோ, டவுண்லோடு செய்வதோ கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒருசில பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இருந்தும் ஒரு சில மாணவ-மாணவிகள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் செல்போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர் ஒருவர் நாகக்கோடு பகுதியில் உள்ள ஒரு சந்துக்குள் கை அறுப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கிடந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவரின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். அவர் அலறியடித்தபடி அங்கு ஓடி வந்தார்.

மாணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது தந்தைக்கு இச்சம்பவம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவர் இச்சம்பவம் பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் மாணவரிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது மாணவர் புளூவேல் விளையாட்டு எதுவும் ஆடவில்லை என்று கூறினார்.

மேலும் வகுப்பில் இருந்து பாட்டி வீட்டுக்கு சென்றபோது என்னை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்தார். அவர் திடீரென என்னை மறித்து கையை பிடித்து இழுத்தார். பின்னர் அவரே பிளேடால் என் கையை அறுத்தார். ரத்தம் கொட்டியதும் நான் அந்த வாலிபரை அடித்தேன். அவர் ஓடிவிட்டார். அதன்பின்பு நடக்க முடியாமல் மயங்கி விட்டேன் என்று கூறினார்.

மாணவரின் வாக்குமூலம் உண்மை தானா? அவரை வாலிபர் தாக்கினாரா? என்பது குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாணவரை தாக்கிய வாலிபர் ஒருவேளை புளூவேல் விளையாட்டு அடிமையாகி மாணவரின் கையை அறுத்தாரா? என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் மாணவர் கையை அறுத்த வாலிபரை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com