

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக தேவேந்திரகுல வேளாளர் மாநாடு வருகிற மே மாதம் 6-ந் தேதி தென் தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது. உலக அளவில் தேவேந்திர குல வேளாளர்களை ஒன்று படுத்துவற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்களை அதில் இருந்து விடுவித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கான ஆணையை வெளியிட மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும்.
திராவிட கட்சிகளின் தோல்வி மற்றும் வீழ்ச்சி தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு காரணம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதற்கு திராவிட கட்சிகளே காரணம். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியை மக்கள் ஒதுக்க வேண்டும். திராவிட கட்சிகளே இருக்க கூடாது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஒரு மாற்றாக அமையும். மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
அரசு பஸ் கட்டணங்களை உயர்த்தியது தவறான முடிவு. இதனை திரும்ப பெற வேண்டும். போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழலை தடுத்தாலே போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்படாது. அ.தி.மு.க அரசு கிடைத்த ஆட்சி வாய்ப்பை தவற விடக்கூடாது.
வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் மரணங்கள் வருத்தம் அளிக்கிறது. வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களை கண்காணிக்க, தலைமை செயலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் அமைப்பினை உருவாக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை மற்ற சமுதாய மக்கள் மீது பயன்படுத்த வேண்டாம் என்று புதிய தமிழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் வலியுறுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews