கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தது

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது. #Krishnawater
கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு வந்தது
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது.

இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையாக ஜூலை மாதத்தில் கண்ட லேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பிதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர்.

இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக உயர்த்தினர்.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது.

வினாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்ரி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் சுப்புராஜ், அரசு, அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், பழனிகுமார், சதீஷ், பழனிகுமார், சண்முகம் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணை தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #Krishnawater

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com