

ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.
அதன்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது.
1984-ல் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995ல் முடிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு முதல் முதலில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இது வரை 40 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இப்படி தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதமடைந்து வருவது தொடர் கதையாக இருக்கிறது. கடைசியாக ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 26 வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதிகபட்சமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 610 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. வேகமாக தண்ணீர் பாய்ந்து வந்ததால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கார்நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கெருகம் பாக்கம், தேவந்தவாக்கம் உட்பட பல பகுதிகளில் கிருஷ்ணா நதி கால்வாயில் கரைகள் சேதம் அடைந்து உளளன.
கரைகள் சேதமடையும் போது பொதுப் பணித்துறை அதிகாரிகள், அதனை தற்காலிகமாக சரிசெய்யும் நடவடிக்கை எடுத்து அதன் பிறகு விட்டு விடுகிறார்கள்.
எனவே மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது கரைகள் மேலும் பலத்த சேதமடைந்து விடுகின்றன. கரைகள் சேதமடையாமல் இருக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.