

புவனேஸ்வர்:
ஜனாதிபதி பதவிக்கு ஜூலை 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இன்று ஒருநாள் பயணமாக ஒடிசா மாநிலம் சென்றார். சிறப்பு விமானம் மூலம் புவனேஸ்வர் விமான நிலையத்தை அடைந்த அவரை பாஜக மற்றும் பிஜு ஜனதாதள கட்சியினர் கூட்டாக சென்று வரவேற்றனர். ஒடிசா சட்டமன்ற அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், முதல்வர் நவீன் பட்நாயக்குடன் மதிய உணவு உட்கொண்டார்.
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராம்நாத் கோவிந்த், தனக்கு ஆதரவு அளித்துள்ள பிஜு ஜனதாதள கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். ஓடிசாவை ஆளும் பிஜு ஜனதாதள கட்சியில் 117 எம்.எல்.ஏ.க்களும் 28 எம்,பி.க்களும் உள்ளனர்.