அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.
அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன்பின், ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

இதையடுத்து, பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்று ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். அதன்பின் காரில் மதுரைக்கு சென்றார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பொறியாளர்களின் உதவியால், நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களுக்கு உகந்த வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை அனைத்து இந்தியர்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் நினைத்திருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று கோடீஸ்வரராக ஆகியிருக்க முடியும். ஆனால் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்தியாவின் மேன்மைக்காக சிறப்பாக பணியாற்றினார். நாட்டில் அனைவருக்கும் பிடித்த முதல் குடிமகனாக இருந்தார் அப்துல் கலாம். 

முன்னாள் முதல்-அமைச்சர்கள் தமிழகத்தின் மரபுகளை கட்டிக்காத்து பெருமை சேர்த்துள்ளனர். அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். பல்வேறு கலைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மாமல்லபுரத்திலுள்ள சோழர், பல்லவர் கால கட்டட சிற்பங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com