கோவில்பட்டி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொலை- மகள் கைது

கோவில்பட்டி அருகே சொத்து தகராறில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.
சுப்பையா
சுப்பையா
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது68). ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. மேலும் நாலாட்டின்புதூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கயத்தாறு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இவரது மனைவி அந்தோணியம்மாள் (64). இவர்களுக்கு மூக்கம்மாள் (45) என்ற மகளும், நாராயணசாமி (42), ரகுராமன் (40), ராமமூர்த்தி (38) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதில் மூத்த மகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் நாலாட்டின்புதூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் மூக்கம்மாள் அடிக்கடி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்தோணியம்மாள் கடந்த ஆண்டு வெளிநாட்டில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் சுப்பையா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். எனினும் தொடர்ந்து மூக்கம்மாள் தனது தந்தையிடம் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வெறுப்படைந்த சுப்பையா தனது மகளை கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த மூக்கம்மாள் கடந்த 3-ந்தேதி பெட்ரோல் கேனுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த சுப்பையா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாலாட்டின் புதூர் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய மூக்கம்மாளை இன்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com