கோத்தகிரியில் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 11 கடைகள் எரிந்து சேதம்

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட்டில் பயங்கர ‘தீ’ விபத்து ஏற்பட்டது. இதில் 11 கடைகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
மார்க்கெட்டில் கொளுந்துவிட்டு எரிந்த தீ
மார்க்கெட்டில் கொளுந்துவிட்டு எரிந்த தீ
Published on

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, பழம், மளிகை கடை என540-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த தினசரி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிச்செல்வார்கள். பரபரப்பாக காணப்படும் இந்த மார்க்கெட்டில் நேற்று மாலை வியாபாரிகள் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் மார்க்கெட்டில் உள்ள பழனியம்மாள் என்பவரது பழக்கடையில் இருந்து லேசான தீயுடன் கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்குள்ளவர்கள் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென மற்றக்கடைகளுக்கும் பரவத்தொடங்கியது.

மேற்கூரைகள் தகரத்தால் வேயப்பட்டிருந்ததால் எளிதில் மற்ற கடைகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கின.

தீ விபத்து குறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் இமானுவேல், கோத்தகிரி நிலைய அலுவலர் அர்ஜூனன், குன்னூர் நிலைய அலுவலர் மோகன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதும் தீ கட்டுக்குள் வரவில்லை. 6 வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விடியவிடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 5 மணிக்கு தீயை முற்றுலும் அணைத்தனர். இதில் 2 மளிகை கடைகள், 1 பூக்கடை, 8 பழக்கடைகள் என 11 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தால் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. 11 கடை உரிமையாளர்களும் எரிந்த கடை முன்பு கண்ணீருடன் சோகமாக நின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com