கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை-மகன் கைது

கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை-மகன் கைது
Published on

கொல்கத்தா:

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்ய எடுத்து செல்லப்படுவதற்கு 10 சதவீதம் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் உள்நாட்டில் தங்க கட்டிகளை வாங்கி அவற்றை நகைகளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டுமானால் சுங்கவரி, வருமானவரி உள்பட பல்வேறு வரிகளை கட்ட வேண்டும். மேலும் மாநில அரசின் வரிகளையும் கட்ட வேண்டியது இருக்கும்.

குறிப்பாக உள்நாட்டில் தங்கத்தை பயன்படுத்தும் நகைக்கடைக்காரர்கள் கோடிக்கணக்கில் வரிகட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு தங்கத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி அந்த தங்கங்களை வெளி நாட்டிற்கு அனுப்பாமல் நூதன மோசடியில் ஒரு நகை கடை அதிபர் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நகை கடை அதிபரின் பெயர் சஞ்சய்குமார் அகர்வால். இவர் கொல்கத்தாவில் இருந்து துபாய்க்கு தங்கம் ஏற்றுமதி செய்ய தனது மகன் பெயரில் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.

2 தினங்களுக்கு முன்பு அவரது மகன் கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருடன் ரூ.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. அவை தனியாக பார்சல் செய்யப்பட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே நகை வியாபாரி சஞ்சய்குமார் அகர்வால் கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வருவதற்கு இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தார். அந்த விமானம் பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானி அந்த விமானத்தை ஓடு தளத்தில் செலுத்தி கொண்டிருந்தார்.

அப்போது வருவாய்த் துறை புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கூறி நிறுத்தும்படி தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் விமான நிலையத்திற்குள் அந்த விமானம் கொண்டு வரப்பட்டது.

அந்த விமானத்தின் பயணிகள் மற்றும் சரக்கு பெட்டக பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த நகை வியாபாரியின் மகன் பெயரில் துபாய் கொண்டு செல்வதற்காக முன்பதிவு செய்து இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள நகை பெட்டி அந்த விமானத்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மகன் பெயரில் தங்கத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக கூறி வரிவிலக்கு பெற்ற அந்த நகை வியாபாரி கூடுதல் வரி எதுவும் செலுத்தாமல் அதை உள்நாட்டிற்குள் விற்பனை செய்வதற்காக மிகவும் தந்திரமாக மாற்றி இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி மூலம் பல கோடி ரூபாய் அந்த நகை வியாபாரிக்கு கிடைக்க இருந்தது.

வருவாய்த்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதை கண்டுபிடித்து முறியடித்தனர். மிகவும் நூதனமான முறையில் மோசடி செய்த நகை வியாபாரி சஞ்சய் குமார் அகர்வாலும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

விமான நிலையத்திற்குள் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி தங்க நகைகளை பார்சல் செய்து பிறகு சோதனைகளும் முடிந்த பிறகு அந்த நகை பார்சல் எப்படி இடம் மாறியது என்பது புரியாத புதிராக உள்ளது. விமானத்திற்குள் பணிபுரியும் ஊழியர்கள் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நகை வியாபாரி சஞ்சய் குமார் அகர்வால் தனது மகனுடன் சேர்ந்து இந்த நூதன மோசடியை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதுவரை அவர்கள் வெளிநாட்டிற்கு 1100 கிலோ தங்கத்தை அனுப்பி இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள அந்த தங்கம் அனைத்தும் ஒரு பைசாக்கூட வரி கட்டாமல் அப்படியே உள்நாட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com