கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளை: நாதுராம் - கூட்டாளிகள் புழல் சிறையில் அடைப்பு

கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாதுராம் - தினேஷ் சவுத்ரி
நாதுராம் - தினேஷ் சவுத்ரி
Published on

செங்குன்றம்:

சென்னை கொளத்தூரில் நகைக்கடையின் மேற்கூரையில் துளைபோட்டு 3½ கிலோ தங்கம், 4½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் (வயது 25), தனது கூட்டாளியான தினேஷ் சவுத்ரி உடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.

அப்போது நாதுராம், நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தார். தமிழக தனிப்படை போலீசார், அந்த இடத்தை சுற்றி வளைத்தபோது நாதுராமின் ஆதரவாளர்கள் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்தான் அவர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு குறி தவறி பாய்ந்ததாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளையன் நாதுராமும், அவருடைய கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். சென்னை போலீசார் அங்கு முகாமிட்டு, ராஜஸ்தான் போலீசாருடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நாதுராமின் கூட்டாளி தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு கொள்ளையன் நாதுராமை, கடந்த 13-ந் தேதி ராஜஸ்தான் மாநில ஜெய்தாரன் போலீசார் கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை சென்னையிலேயே விற்றுவிட்டு, ராஜஸ்தான் தப்பி வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு கூட்டாளியான பக்தாராம் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளை விசாரணைக்காக சென்னை கொண்டுவர கடந்த 23-ந் தேதி சென்னை கூடுதல் கமிஷனர் ஜெயராம் தலைமையில் இணை கமிஷனர் சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார்(ராஜமங்கலம்), விஜயராகவன்(அம்பத்தூர் எஸ்டேட்), நடராஜ்(திருமங்கலம்) மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றனர்.

நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து செல்வதற்கான ஆவணங்களை ஜெய்தாரன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் ஜெய்தாரன் சிறையில் இருந்த நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என 3 பேரையும் அழைத்துக்கொண்டு விமானம் மூலம் நேற்று அதிகாலை தனிப்படை போலீசார் சென்னை வந்தனர்.

பின்னர் சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கோபிநாத் முன்னிலையில் 3 பேரையும் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்த பிறகு நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகள் என 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய உள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com