கொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்

கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
கொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
Published on

நீலகிரி:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ‌சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். 

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.

இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com