

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருச்சூரை சேர்ந்த குட்டி என்கிற ஜிஜினை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரை கோத்தகிரிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த சம்பவத்தை அவர் நடித்துக் காட்டினார். அதனை வீடியோவில் பதிவு செய்தனர்.
பின்னர் அவரை மாலையில் கோத்தகிரி மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் 15 நாட்கள் குட்டியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பங்களாவில் கொள்ளையடித்த பின்னர் குட்டி உள்ளிட்ட 3 பேர் ஒரு காரில் தப்பி சென்ற போது கூடலூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்களது காரை மறித்துள்ளனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் காரை மடக்கி உள்ளனர்.
அப்போது குட்டி தனக்கு தெரிந்த கூடலூரை சேர்ந்த வி.ஐ.பி. ஒருவரை போலீசாரிடம் பேச வைத்ததும், அவர் கூறியதன் அடிப்படையில் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து விட்டு காரில் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக 24-ந் தேதி கூடலூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 13 பேரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா விசாரணை நடத்தி வருகிறார்.
இதனடிப்படையில் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், கொள்ளை கும்பலுக்கு ஆதரவாக பேசிய வி.ஐ.பி. யார்? அவருக்கு கொள்ளை கும்பலுடன் எந்த வகையில் தொடர்பு ஏற்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் கும்பலில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த குட்டி என்கிற ஜிஜினும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
இவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன் பாலக்காடு அருகே விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று விட்டனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கின் குற்றபத்திரிகை தயாரிக்கும் பணியை போலீசார் தொடங்கி உள்ளனர்.
வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு குற்ற பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.