

கோவை:
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சயன் கடந்த ஏப்ரல் 29-ந் தேதி பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் சயனின் மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோர் இறந்தனர். படுகாயமடைந்த சயன் கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மே மாதம் 17-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து அவர் கடந்த 6-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். உடனடியாக அவரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் சில மணி நேரத்தில் மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கை வலி, ஜீரணக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சயன் நேற்று மாலை 4.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போலீசார் அவரை கோவை ஜெயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சயனுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் சில நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதையடுத்து சயன் இரவு 9.30 மணிக்கு மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டார். சயனுக்கு இயற்கை உபாதை கழிக்கும் பாதையில் உள்ள காயங்கள் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுவதாக சிறை டாக்டர்கள் கூறி அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.