

கோவை:
கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் பலியானார்.
அவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன் கேரளாவுக்கு காரில் தப்பி சென்ற போது குடும்பத்துடன் விபத்தில் சிக்கினார். இதில் சயனின் மனைவி வினு பிரியா, மகள் நீனு ஆகியோர் பலியாயினர். சயன் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் தேறிய அவர் கடந்த 6-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்து கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை கோவை ஜெயிலில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது சயன் உடல் வலி அதிகமாக இருப்பதாக கூறினார். இதையடுத்து அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகளுக்கான வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை சயன் ஆஸ்பத்திரியில் தற்கொலைக்கு முயன்றாக தகவல் பரவியது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இதுகுறித்த தகவல் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
யாரோ வதந்தி கிளப்பி விட்டதாகவும், அதனாலேயே இதுபோன்ற தகவல் பரவியதாகவும் கூறிய டாக்டர்கள் சயனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தினர். விபத்தில் காயமடைந்து ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்த சயன் நேற்று நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டார். நேற்று அவர் வெளி நோயாளிகளுக்கான வார்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர்கள் பரிசோதித்து தேவையான சிகிச்சைகளை அளித்துள்ளனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் பேசியவர்கள் யார்-யார்? அவர்கள் கும்பலுடன் எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொடநாடு பங்களாவில் மர வேலைகள் செய்து வந்த வியாபாரி சஜீவனின் அண்ணன் சுனில் என்பவர் இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுனிலை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த அன்று கும்பல் காரில் தப்பி சென்ற போது கூடலூர் அருகே போலீஸ் வாகன சோதனையில் சிக்கியதும் இவருக்கு தான் போன் செய்து உதவி கேட்டுள்ளனர். உடனே சுனில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரபலம் ஒருவரிடம் பேசி அவர் மூலமாக போலீசாரிடம் இருந்து கும்பல் தப்பிக்க உதவியது தெரிய வந்தது.
பங்களாவில் வேலை பார்த்தவர்கள் என்ற வகையில் மட்டும் அவர்களுக்கு உதவியதாகவும், கும்பலின் பின்னணி பற்றி எனக்கு தெரியாது எனவும் சுனில் போலீசாரிடம் கூறி உள்ளார். இதேபோல கும்பலுடன் செல்போனில் தொடர்பில் இருந்து மேலும் பலரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.