

கொடைக்கானல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பியது. வெள்ளி அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைச்சாலையில் ஆங்காங்கே சிறிய அருவிகள் தோன்றின. சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வமுடன் ரசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் கன மழை பெய்தது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு, பழனி-தாண்டிக்குடி மலைச் சாலைகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக அடுக்கம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதனால் காய்கறிகளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வத்தலக்குண்டு சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பல கோடி செலவில் இந்த சாலை சீரமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மோட்டார் சைக்கிள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மழை குறைந்துள்ளதால் சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.