கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

கோடை காலம் தொடங்கும் முன்பே கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக் கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த போதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பகல் 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதனால் பொருட்கள் எரிந்து நாசமானது. வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மார்ச் மாதமே அனல் காற்று வீசி வருவதால் குழந்தைகள், பெரியவர்கள் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுககு வருவதை தவிர்த்து விடுவார்கள்.

மரங்கள், வனப்பகுதி குறைந்து வருவதால் கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மரங்கள் நடப்படாததால் வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. இதற்கான கட்டமைப்பு இருக்கிறதா? என தெரிய வில்லை. எனவே வருங்காலங்களில் வனப்பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com