பாகூர் அருகே 4 பேருக்கு கத்திகுத்து- 2 பேர் கைது

பாகூர் அருகே 4 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பாகூர்:

பாகூர் அருகே இருளன் சந்தை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்திரகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சித்தார்த் (வயது 20).

இவருக்கும், குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று சித்தார்த் தனது நண்பரான குமார் என்பவருடன் பாகூருக்கு சென்றார். அப்போது குருவிநத்தம் ரோட்டில் சென்றபோது அங்கு ஸ்ரீதருடன் நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி ராஜேஷ், சித்தார்த்தை வழிமறித்து எனது நண்பர் ஸ்ரீதரிடம் தகராறு செய்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததால் சித்தார்த்தும், அவரது நண்பர் குமாரும் வீடு திரும்பினர்.

ஆனால், ஆத்திரம் தீராத ராஜேஷ் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களான ஸ்ரீதர், ரமேஷ், ஐயனார் ஆகியோருடன் சித்தார்த் வீட்டுக்கு வந்தார்.

அங்கு வீட்டில் இருந்த சித்தார்த்தை வெளியே இழுத்து வந்து ராஜேஷ் சரமாரியாக கத்தியால் குத்தினார். மேலும் இதனை தட்டிக் கேட்ட சித்தார்த்தின் நண்பர் குமாரையும் அவர் கத்தியால் குத்தினார்.

அதோடு இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்களான ரமேஷ், ஐயனார் ஆகியோரையும் ராஜேஷ் கத்தியால் குத்தினார்.

இதில், படுகாயம் அடைந்த சித்தார்த், அவரது நண்பர் குமார் மற்றும் ரமேஷ், அய்யனார் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக சித்தார்த் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் மற்றும் ஸ்ரீதரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com